பதிவு செய்த நாள்
19
அக்
2017
12:10
முருகனின் முதல் கோவில்
* முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம். இந்த தீய பண்புகளே சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
* ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் படித்தால் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு நன்மை உண்டாகும்.
* முருகனின் வலதுபுறம் உள்ள ஆறு கைகளில் அபய கரம், கோழிக்கொடி, வச்சிராயுதம்,
அங்குசம், அம்பு, வேல் என்னும் ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கைகளில்
வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகியவை இருக்கும்.
* கந்த புராணத்தில் உள்ள சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் படித்தால் பாவம் அனைத்தும் நீங்கும்.
* முருகனை வணங்க ஏற்ற திதி -- சஷ்டி, நட்சத்திரம் - விசாகம் மற்றும் கார்த்திகை, கிழமை - திங்கள், செவ்வாய்
* முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவணபவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பராசக்தியால் ஆறு உருவமும் ஒரே வடிவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என பெயர் பெற்றான்.
* முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன் என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
* அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்யகர்ப்பன் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன்.
* முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி என பெயர் பெறும்.
* முருகனே திருஞானசம்பந்தராக அவதாரம் செய்ததாக சொல்வர்.
* தமிழகத்தில் முருகனுக்கு குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் திருப்பரங்குன்றம்,
கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான் மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
* பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளில் முருகன் வழிபாடு உள்ளது.
* மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது.
* முருகனின் சேவல் கொடிக்கு குக்குடம் என்று பெயருண்டு. இந்த சேவல் அதிகாலையில் ஓங்கார மந்திரத்தை ஒலி வடிவில் உணர்த்துகிறது.
* முருகனுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, செங்காந்தள்.
* முருகனை ஒரு முறையே சுற்றி வந்து வணங்க வேண்டும்.
* முருகனை போன்று கர்ப்ப வாசம் செய்யாத தெய்வம் வீரபத்திரர்.
* முருகனுக்கு விசாகன் என்றும் பெயருண்டு. இதற்கு மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருள்.
* முருகனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணுார் கோயில். முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட இங்கு முருகனுக்கு யானை வாகனம் உள்ளது. ஒரு கையில் ஜப மாலையும், மறு கையில் சின்முத்திரையும் காட்டியபடி
வீற்றிருக்கிறார்.
* அறுவகை வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு கவுமாரம் எனப்படும்.
* பிரம்மனை சிறையிலிட்ட முருகன், படைப்புத் தொழில் செய்தார். இதை உணர்த்தும் விதமாக, திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ., துாரத்திலுள்ள சின்னாளபட்டியில் நான்கு முகம் கொண்டவராக அருள்பாலிக்கிறார்.நொடியில் வந்த மயில் வீரன்அருணகிரிநாதரின் பக்தி, பாடல் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்னும் காளி உபாசகர் பொறாமை கொண்டார்.
திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபுடதேவன் என்னும் மன்னர் முன்னிலையில் இருவரில் யாருடைய பக்தி சிறந்தது என்றபோட்டி நடந்தது. முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் திருக்காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து முயற்சி செய்தான். ஆனால் சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தின் கம்பத்தில் காட்சி தந்தார். இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் “அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா”
என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
சரவணபவ மந்திரம்: சரவணபவன், முருகன், கந்தன், குகன், வேலாயுதம், மயில் வாகனன், சேவல்கொடியோன், குமரன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சிவகுரு என்று முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக சரவணபவ உள்ளது. இதைச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி(பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயம் நீங்குதல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வர். சரவணன் என்றால் பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயிலில் உள்ள குளங்களை சரவணப்பொய்கை என குறிப்பிடுவர்.
பகைவனுக்கு அருள்வாய்!
பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று அருளாளர்கள் புத்திமதி கூறுவர். அப்படிப்பட்ட நெஞ்சம் கொண்டவனே முருகன். சூரன் மாமரமாக நின்றான். வேலால் மரத்தை இருகூறாக்கி, ஒரு பகுதியை மயிலாக்கி தன் வாகனமாக்கி கொண்டார். மற்றொரு பகுதியை, சேவலாக்கி தனக்கு கொடியாக்கிக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருள் கொடுத்து, தன் அன்பராக்கும் பண்பு முருகனுக்கே உண்டு
ஆயிரம் கோடி மன்மதன்: அழகை விரும்பாதவர்கள் யார்? பச்சைப் புல்வெளி கண்களுக்கு அழகாக இருக்கிறது. அருவியின் குளிர்சாரல் கண்ணுக்கும், மனதுக்கும் களிப்பூட்டுகிறது. நந்தவனத்தில் வீசும் பூங்காற்றும், வாசனை மலர்களும் கண்ணையும் கருத்தையும் ஈர்க்கின்றன. இப்படி அழகெல்லாம் ஒன்று திரண்டவனே மன்மதன். இவனுக்கு மாரன் என பெயருண்டு. இந்த மன்மதனை போன்று ஆயிரம் மடங்கு அழகு கொண்டவன் குமாரன். முருகனின் பேரழகின் முன், மன்மதனின் அழகு ஏளனப்பொருளாகி விட்டதாம். இதனால் முருகனுக்கு குமாரன் என்ற பெயர் உண்டானது. கு என்பது அதிகப்படியானது என்பது பொருள். மாரன் (மன்மதன்) கருணை நிறம் கொண்டவன். அதனால் மன்மதனை கருவேள் என்பர். குமாரன் (முருகன்) சிவந்த நிறமுடையவன் என்பதால் செவ்வேள் என்பர். ஆயிரம் கோடி மன்மதனின் அழகெல்லாம் ஒன்று சேர்ந்தது போல முருகன் திகழ்வதாக கந்தபுராணம் கூறுகிறது.
கடலுக்குள் கிடந்த முருகன் சிலை: திருச்செந்துார் முருகனை பக்தர்கள் ஆறுமுக நயினார் என அழைப்பர். இவர் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார்.17ம் நுாற்றாண்டில் டச்சுக்காரர்கள் ஆறுமுகநயினாரின் விக்ரஹத்தைக் கடத்திச் சென்றனர். கடலில் செல்லும் போது புயல் வரவே, அதைக் கடலுக்குள் போட்டு விட்டனர். ஐந்து ஆண்டுகள் வரை சிலையில்லாமல் வழிபாடு நின்றது. எனவே, வடமலையப்ப பிள்ளை என்பவர் வேறொரு சிலை செய்ய முடிவெடுத்தார். ஆறுமுகநயினார் அவரது கனவில் தோன்றி கடலில் தான் இருப்பதை உணர்த்தினார். படகில் சென்று சிலையை வடமலையப்பபிள்ளை தேடினார். நடுக்கடலில் கருடன் வட்டமிட்டபடி இருக்க கண்டார். அங்கு கடலில் எலுமிச்சம்பழம் மிதந்தது. கனவில் வந்த ஆறுமுகநயினார் சொன்ன இடம் இதுவென அறிந்தார். அந்த இடத்தில் மூழ்கிப் பார்த்த போது ஆறுமுகநயினார் சிலை கிடைத்தது. இந்த வரலாறு திருச்செந்துார் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
பிடித்தது பிட்டு: முருகனின் படைத்தளபதியாக விளங்கியவர் வீரபாகு. வெற்றி வேல் வீர வேல் என முழக்கமிட்டு, முருகனின் படைகளைத் தட்டி எழுப்பியவர். இதைப் பாராட்டி, திருச்செந்துாரில் உள்ள தனது கர்ப்ப கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வமாக இருக்க அருள்புரிந்தார். அத்துடன் திருச்செந்துாருக்கு வீரபாகு பட்டினம் என்ற பெயர் சூட்டினார். வீரபாகுவுக்கு சிறப்பு செய்யும் வகையில் முதலில் வீரபாகுவுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இவருக்கு பிடித்தமான உணவு பிட்டு. இவருக்கு பிட்டமுதை நிவேதனமாக படைத்தால் நம் விருப்பம் விரைவில் நிறைவேறும்.