பதிவு செய்த நாள்
25
அக்
2017
06:10
தூத்துக்குடி: அரோகரா கோஷத்துடன், திருச்செந்தூர் கடற்கரையில் சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.
திருச்செந்தூர் முருகன்கோயில் கந்தசஷ்டி விழா, அக்.,20 ல் துவங்கியது. ஆறாம் நாளான இன்று (அக்.,25), சூரசம்ஹாரம் நடந்தது. கோயில் நடை, அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை சூரன் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டார்; சுவாமி ஜெயந்திநாதருக்கு கந்தசஷ்டி விரத மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமி, சூரனை வதம் செய்ய, கடற்கரைக்கு புறப்பட்டார்.
முதலில், யானைத் தலையுடன் வந்த சூரன், சுவாமியை ஆணவத்தோடு மூன்றுமுறை வலம் வந்து போரிட்டான். ஜெயந்திநாதர் சூரசம்ஹாரம் செய்தார். பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். இரண்டாவதாக, சிங்கத் தலையுடனும், மூன்றாவதாக சுயரூப சூரபத்மனாகவும் போரிட்ட சூரனை, சம்ஹாரம் செய்தார். நான்காவதாக, மாமரமாக போரிட்ட சூரனை, தனது கொடியாகவும், மயிலாகவும் சுவாமி ஆட்கொண்டார். லட்சக்கணக்காக பக்தர்கள் தரிசனம் செய்தனர். சம்ஹாரம் முடிந்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலில் நீராடி, விரதத்தை முடித்தனர்.