பதிவு செய்த நாள்
01
நவ
2017
12:11
சென்னை : சென்னையிலும், ராஜராஜ சோழனின் பிறந்தநாளான, சதய விழாவை கொண்டாட வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, அண்ணாசாலையில் உள்ள உமாபதி கலையரங்கில், நேற்று, ராஜராஜ சோழனின் சதயவிழா மற்றும் பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில், அரசு விழாவாக, ராஜராஜ சோழனின் பிறந்த விழாவான, சதய விழாவை கொண்டாட வேண்டும். சமூக தொண்டு, ஆட்சிப் பணியில் சிறந்து விளங்குவோருக்கு, தமிழக அரசு, ராஜராஜ சோழன் விருது வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழக அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். ஆதிச்சநல்லுார் அகழாய்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும். சென்னை விமான நிலையத்தின் எதிரில் உள்ள மலையில், 150 ஆண்டுகளுக்கு முன், ராபர் புரூஸ்புட், உலகின் முதல் கற்கோடரி தொழிற்சாலையை கண்டுபிடித்தார். அதன் நினைவு சின்னத்தை அங்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.