அனைத்து ஆன்மாக்கள் தினம் (ஆல்சோல்ஸ் டே) எனப்படும் கல்லறை தினம், இன்று அனுஷ்டிக்கப் படுகிறது. மறைந்த கிறிஸ்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுடைய கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி வைத்து மரியாதை செலுத்தும் தினமே கல்லறைத் திருநாள். கல்லறை தினத்துக்கு ஆண்டவரே வித்திட்டார். கடவுள், ஆதிமனிதனான ஆதாமை மண்ணினால் படைத்து, அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார். ஆதாமும் ஏவாளும் கணவன் மனைவி ஆயினர். அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக, கடவுள் அவர்களிடம், “பூமியின் மண்ணிலிருந்து படைக்கப் பட்டபடியால் மண்ணுக்கே திரும்புவாய்,” என்றார். இதனாலேயே மரித்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டனர்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவரை பின்பற்றிய சீடர்களுக்கு 40 நாட்கள் காட்சி அளித்து பின் வானத்துக்கு ஏறிப்போனார் என பைபிள் கூறுகிறது. அதன் அடிப்படையில், துறவறம் கொண்டவர்களை பரிசுத்தவான்கள் என்று அழைத்தனர். அவர்களுக்கு நவ.1ல் பரிசுத்தவான்களின் தினம்(ஆல் செயின்ட்ஸ் டே) என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனுஷ்டித்து வருகின்றனர். பரிசுத்தவான்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கி.பி.998லிருந்து பிரான்ஸ் தேசத்தில் நவ.2ம் தேதியை பொதுவான கல்லறை தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று கல்லறை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.