பதிவு செய்த நாள்
08
நவ
2017
11:11
திருவண்ணாமலை, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் சுவாமி பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அஷ்டபந்தன மருந்து சேதமானது குறித்து விசாரிக்க, இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டுஉள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், பிப்., 6ல், கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கோவிலில் உள்ள அனைத்து சன்னதி களின் மூலவருக்கும், அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. இந்த மருந்து, மறு கும்பாபிஷேகம் நடத்தும் வரை சேதமாகமல் இருக்கும்.ஆனால், அருணாசலேஸ்வரர் சுவாமி சன்னதியின் கருவறையில், லிங்கத்திற்கு சாற்றப்பட்ட மருந்து, ஓரிரு மாதங்களிலேயே சேதமாகி விட்டது.இது குறித்து, மே 18ல், இணை ஆணையர் ஜெகன்நாதன் கவனத்திற்கு, கோயில் குருக்கள் தெரியப்படுத்தினர். கருவறைக்குள், பூஜை செய்யும் குருக்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதி கிடையாது என்பதால், உரிய விசாரணை நடத்தி, செப்., 21ல், அறநிலையத் துறை ஆணையருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ’அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையர், வேலுார் துணை ஆணையர், பூஜை செய்யும் குருக்கள் ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும். உண்மை தன்மையை கண்டறிந்து, அறநிலையத் துறை தலைமை ஸ்தபதிக்கு தெரிவித்து, அவரின் ஆலோசனைப்படி, மீண்டும் மருந்து சாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அறநிலையத் துறை ஆணையர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.