மயிலம்: மாணவர்கள் கல்லுாரி படிக்கும் காலத்தில், களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மயிலம் ஆதீனம் அறிவுரை வழங்கினார். மயிலம் முருகன் கோவில் வளாகத்தில் நடந்த இதழ் வெளியீட்டு விழாவில், மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்கள் வருங் காலத்தை கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். கல்லுாரியில் பயிலும்போதே மாணவர்கள், ஆசிரியர்களுடன் சேர்ந்து களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்கள் வெளி உலகத்தை நன்றாக அறிந்து கொள்ள முடியும். களப்பணியினால் ஒரு மரம் நட்டால்கூட, அது இந்த சமூகத்திற்கு பெரும் பலன் அளிப்பதாக இருக்கும். பாலசித்தர் என்ற இந்த இதழ் வெளியிடுவதன் நோக்கம் தமிழ் மேலும் வளரவேண்டும், கலை, இலக்கிய, பண்பாடு வளர்ச்சியடைய வேண்டும். மனித சமூகத்தில் முறையான ஒழுக்கம், பண்பாடு வந்து விட்டால், எல்லாம் நம்மிடம் வந்துவிடும். இவ்வாறு மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் பேசினார்.