பதிவு செய்த நாள்
16
நவ
2017
12:11
சென்னை : நல்லவர்கள் சம்பந்தம் கிடைத்தால், நமது வாழ்வும் நல்வழியில் செல்லும், என, நெரூர் ஆசிரம பீடாதிபதி, வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினார். கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின், 35வது ஜெகத்குரு சங்கராச்சாரியார் அபினவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகள். இவரின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம், ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷன் சார்பில், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிருங்கேரி ஜகத்குரு பிரவன மந்திரத்தில் நேற்று துவங்கியது.இதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று, நுாற்றாண்டு விழா, சிறப்பு கண்காட்சியை துவக்கி வைத்தார்.
விழாவில், நெரூர் ஆசிரம பீடாதிபதி சுவாமி வித்யாசங்கர சரஸ்வதி பங்கேற்று, பேசியதாவது:அரசு பதவியில் இருப்போர், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால், நாடு சிறந்து விளங்கும். சிலர், சாமர்த்திய வார்த்தைகளால் கடவுள் இல்லை என்ற மாயையை உருவாக்க பார்ப்பர். அது, மேகம் போல விரைவில் கலைந்துவிடும்.தற்போது, நல்ல படிப்பு, வசதியுடன் இருந்தால் வாழ்க்கை நிறைவு பெற்றதாக நினைக்கின்றனர். அது, நிறைவான வாழ்க்கை இல்லை. நல்லவர்கள் சம்பந்தம் கிடைத்தால், நம் வாழ்வும் நல்வழியில் செல்லும். கடவுளில் உயர்ந்தது, தாழ்ந்தது என எதுவும் இல்லை. யார் யாருக்கு எந்த கடவுளை பிடிக்கிறதோ, அதன் மூலம் ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். லட்சுமி நரசிம்மரின் சொரூபமாக, அபினவ வித்யாதீர்த்த சுவாமிகள் விளங்குவதாக, அவரின் குருவே கூறியுள்ளார். அவரின் உபதேசம் படி நடப்போம்.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பவுண்டேஷன் அறங்காவலர் கிருஷ்ணன் வரவேற்றார். சொற்பொழிவாளர் சுந்தரகுமார், பவுண்டேஷனை சேர்ந்த வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.நேற்று துவங்கிய நுாற்றாண்டு விழா கொண்டாட்டம், நவ., 20ம் தேதி வரை நடக்கிறது.