பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
மோகனூர்: ’வரும், ஜன., 31ல் தைப்பூசத் திருவிழா அன்று, சந்திரகிரஹணம் ஏற்படுவதால், காலையில், தேரோட்டம் நடத்தப்பட்டு, மாலையில் கோவில் நடை சாத்தப்படும்’ என, காந்தமலை பாலதண்டாயுத பாணி கோவில் நிர்வாகம் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், காளிப்பட்டி கந்தசாமி கோவில், நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோவில், தத்திகரி முருகன் கோவில், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவில், ப.வேலூர் கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில், தைப்பூசத் திருவிழா, ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன், கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு செல்வர். மோகனூரில் உள்ள, பிரசித்தி பெற்ற காந்தமலை பாலதண்டாபுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபடுவர். வரும், 2018, ஜன., 31ல், தைப்பூசத் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், மாலை, 5:30 மணிக்கு மேல் சந்திரகிரஹணம் ஏற்படுகிறது. அதனால், வழக்கமாக நடக்கும் தேரோட்டம், அன்று காலையில் நடத்தப்பட்டு, மாலை கோவில் சாத்தப்படுவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.