பதிவு செய்த நாள்
14
டிச
2011
11:12
காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில், நேற்று முதல் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது.இக்கோவிலில் உள்ள, "ஆண்டவர் உத்தரவு பெட்டியில், பூஜைக்கு வைக்க வேண்டிய பொருட்கள் குறித்து, பக்தர்களின் கனவில் ஸ்வாமி தெரிவிப்பார். அந்த பக்தர், தனக்கு கனவில் தோன்றி, ஸ்வாமி கேட்ட பொருளை எடுத்து வந்து, நிர்வாகத்திடம் தெரிவிப்பார். கோவில் சிவாச்சாரியார்கள், இதுபற்றி, ஸ்வாமியிடம் பூ உத்தரவு கேட்டு, அப்பொருளை பெட்டியில் வைப்பர்.ஆகஸ்ட் 8ம் தேதி ஒரு பக்தர் கனவில் தோன்றிய ஸ்வாமி, வெல்லமும், 50 ரூபாய் நோட்டும் வைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஸ்வாமி உத்தரவு பெற்று, அப்பெட்டியில் நேற்று முன்தினம் வரை வெல்லமும், 50 ரூபாய் நோட்டும் இருந்தது.நேற்று முன்தினம் பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கனவில், ஸ்வாமி தோன்றி, தனக்கு தண்ணீர் வைத்து பூஜிக்கும்படி கேட்டுக் கொண்டார். கோவில் நிர்வாகத்திடம், சுப்பிரமணியம் இதை தெரிவித்து, ஸ்வாமியிடம் உத்தரவு பெறப்பட்டு, நேற்று முதல் பெட்டியில் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டது.