பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
தமிழகத்தில், சிலை கடத்தலை தடுக்க, அனைத்து கோவில்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் அலாரம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 529 கோவில்கள் உள்ளன. இவற்றில், 34 ஆயிரம் கோவில்களில், வருமானம் வருகிறது.
10 லட்சம் ரூபாய் : மேலும், 3,400 கோவில்களில், 10 ஆயிரம் ரூபாய் முதல், இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது; 557 கோவில்களில், இரண்டு லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும், 234 கோவில்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருவதாக, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், மிகவும் பழமைவாய்ந்த கோவில்களில், ஐம்பொன் சிலைகள், மரகத கற்சிலைகள் என, அரிய வகை பழங்கால சிலைகள் வழிபாட்டில் இருக்கின்றன. இவற்றை மர்ம ஆசாமிகள் திருடி, வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று, கோடிக்கணக்கில் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில், கோவில்களில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் அலாரம் பொருத்தப்படும் என, ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறை அறிவித்திருந்தது. ஆனால், அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் மட்டுமே, கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன்படி, 40 சதவீத கோவில்களை தவிர, பெரும்பாலான கோவில்களில், கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
அலாரம் பொருத்தம் : இது, கோவில்களில் சிலை கடத்தும் மர்ம ஆசாமிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. இதனால், சுவாமி சிலை கடத்தல் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே, தமிழகத்தில் சிலை கடத்தலை தடுக்க, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்களுடன், அலாரமும் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம், உண்டியல் திருட்டும் தடுக்கப்படும் என, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -