பதிவு செய்த நாள்
02
டிச
2017
01:12
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படுவதால், 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட, கொப்பரை பொருத்தப்பட்டுள்ளது. ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீது, மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்களும் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோவில் மேல்தளத்தில், கார்த்திகை மாதம் மஹா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கடந்த, 2014 வரை, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்னர், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை வாங்கப்பட்டு, அதில் கார்த்திகை மஹா தீபம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மஹா தீபம் ஏற்றும் நிகழ்வு, இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக, ஏற்கனவே இருந்த, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை அகற்றப்பட்டு, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய கொப்பரை நேற்று பொருத்தப்பட்டது. மேலும் தீபம் ஏற்றுவதற்கு, 100 மீட்டர் காடா துணியும் வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருந்த, 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரை சரியாக எரியாததால், அதை, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையாக குறைத்துள்ளனர். இன்று மாலை ஏற்றப்படும் தீபத்திற்கு, பக்தர்கள் நெய், எண்ணெய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.