பதிவு செய்த நாள்
02
டிச
2017
04:12
● 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி, பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயர் தற்போது வழங்கப்படுகிறது.
● திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில், அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.
● அண்ணாமலையாரின் ஆடைகள் உள்ள அறை வஸ்திர கொட்டடி, பொக்கிஷ அறை அருகில் உள்ளது.
● மலையைச் சுற்றி எட்டு நந்திகள் உள்ளன. ராஜகோபுரம் எதிரிலுள்ள சர்க்கரைக் குளக்கரையில் உள்ளது முதல் நந்தி.
● பஞ்சமுக சாமி என்னும் இசக்கி சுவாமிகள், திருவண்ணாமலையை 1008 முறை அங்கப்பிரதட்சணம் செய்தவர். இல்லறத் துறவியான இவர் 1959ல் திருவண்ணாமலை வந்தார்.
● திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய, திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன.
● ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம். மழை போல வள்ளல் தன்மை கொண்டதால் ஓயாமாரி மடம் என்றும் சொல்வர்.
● செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் என்றவர் சேஷாத்ரி சுவாமிகள்.
● மாசி மாதத்தில் முதல் ஐந்து நாள் அம்மன் சன்னதியில் சூரிய ஒளிபடும். தினமும் அம்மனின் முகத்தில் படும் ஒளி, சிறிது சிறிதாக பாதம் வரை இறங்கும்.
● லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.
● திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம். மகிழ மரம், வடவால விருட்சம் என்றும் சொல்வதுண்டு.
● ராஜகோபுரத்தின் கீழ்தளத்திலுள்ள தூண்களில், பரதநாட்டியத்தின் 108 கரணங்கள்
சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
● அக்னி நட்சத்திர காலத்தில் அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த குளிர்ந்த நீரில் அபிஷேகம், தயிர் சாதம் படைத்து, நீர் சொட்டும் தாராபாத்திரத்தை
லிங்கத்தின் உச்சியில் வைப்பர்.
● ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமி சமாதி உள்ளது. தலைவலி குணமாக பக்தர்கள் இங்கு சுற்றி வந்து வழிபடுகின்றனர்.
● கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை மூன்றாம் தேதியும் அண்ணாமலையார் மலை சுற்றி வருவார்.
● மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், சிவபக்தராக மாறினார். தமிழில் சரளமாக பேசுவார்.
● திருவண்ணாமலைக்கு தென்திசை கைலாயம், கவுரி நகரம், சுத்த நகரம், ஞானபுரி என பெயர்கள் உண்டு.
● இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நூலில் திருவண்ணாமலை, ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
● திருவண்ணாமலை கோயில் கோபுரங்கள் பற்றி ஆராய்ச்சி நூல் எழுதிய வெளிநாட்டவர் கிரேவ்லி.
● திருவண்ணாமலை ஆண்டார், மகாதேவர், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணா நாட்டு உடையார், திருவண்ணாமலை உடையார் ஆகிய பெயர்களால் அண்ணாமலையார் குறிக்கப்படுகிறார்.
● திருவெம்பாவை பாடலை மாணிக்க வாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.
● அண்ணாமலை கோயிலுக்கு 100 ஏக்கர் நிலம் தானம் அளித்தவர் தனக்கோட்டி முதலியார். தர்மகர்த்தாவாக இருந்தார்.
● தீபத்திருவிழாவில் ஏதேனும் தவறு நடந்தால் (காலம் தாழ்ந்த பூஜை), தீட்டு ஆகியவற்றுக்கு பரிகாரமாக, விழா முடிந்ததும் பிராயச்சித்த ஹோமம் நடத்துவர்.
● சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை ஆகியவை திருவண்ணாமலையில் இருந்தன.
● பெரிய சந்திரசேகரர், சின்ன சந்திரசேகரர், பக்தானுக்ரஹ சோமாஸ்கந்தர், பெரிய நாயகர், சின்ன நாயகர் ஆகிய பெயர்களில் அண்ணாமலையார் உற்சவராக பவனி வருவார்.
● திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல்நாள் துர்க்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.
● கார்த்திகை தீப திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் புறப்படுவர். அதற்கு முன் அர்த்தநாரீஸ்வரர் வேகமாக எழுந்தருள்வார். அவர் வந்ததும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
● கார்த்திகை தீபத்திற்கு முன் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அண்ணாமலை தீபம் மலைக்கு புறப்படும் முன் கஜ பூஜை நடத்தப்படும்.
● மலை தீபம் ஏற்ற காண்பிக்கப்படும் தீப்பந்தத்தை எலால் என்பர். சிக்னல் போல இதை காட்டியதும், மலையில்தீபம் ஏற்றுவர். அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்னும் கோஷம் எதிரொலிக்கும்.
● திருவண்ணாமலைக்கு இரு தலபுராணங்கள் கோயிலுக்கு உள்ளன. இதில் அருணகிரி புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞானசம்பந்தர். அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.
● சோணாசலத்திற்கு (திருவண்ணாமலைக்கு) சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோம வாரத்திற்கு சிறந்த விரதமில்லை என்ற பழமொழி உண்டு.
● மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நாட்களில் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக எழுந்தருள்வார். வேறு எந்த சுவாமியும் இந்த வழியாக வருவதில்லை.
● கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார், பிச்சை இளையனார் என்ற மூன்று முருகன் சன்னதிகள் இங்கு உண்டு.
● சாக முயன்ற அருணகிரிநாதரை முருகப்பெருமான் காப்பாற்றி ஆசி அளித்த கிளி கோபுரம் இங்கு உள்ளது. இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் 79 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
● சம்பந்த விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், மன்னர்கள் முடிசூடுவது வழக்கம். அண்ணாமலையார் சன்னதியில் முடிசூட்டும் வழக்கமில்லை.
● பச்சரிசி, வெல்லம், எள் சேர்த்த கொழுக்கட்டை, கார்த்திகை பொரி, வெல்லம் சேர்த்த பொரி உருண்டை, அவல் ஆகியவை கார்த்திகை தீபநாளில் படைக்கும் நைவேத்யம்.
● ஆறுகால பூஜையின் போது சுவாமிக்கு 16 வகை தீபம் காட்டுவர். இதில் மகாதீபம் சிவனைக் குறிக்கும்.
● புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டாலஜி என்ற நிறுவனம், திருவண்ணாமலை கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.
● அண்ணாமலை என்பதற்கு நெருங்க முடியாத மலை என பொருள். சிவன் நெருப்பு வடிவில் நின்றதால் இப்படி ஒரு பெயர் ஏற்பட்டது.
● தீப தரிசனத்திற்கு வருவோருக்கு அக்காலத்தில் சட்டிச்சோறு பிரசாதம் அளித்தனர். புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு, வாழை இலையுடன் சோறு இடம்
பெற்றிருக்கும்.
● இக்னீஷியஸ் ராக் என்னும் பாறை வகையைச் சேர்ந்த மலை, திருவண்ணாமலை. நெருப்பினால் உண்டான மலை என்பது இதன் பொருள்.
● அருணகிரியாரின் தாய் முத்தம்மை வழிபட்ட விநாயகர், முத்தம்மை விநாயகர் எனப்படுகிறார். தேரடிவீதிக்கும், கொசமடத் தெருவுக்கும் இடையிலுள்ள ரேடியோ கிரவுண்ட் பகுதியில் இவருக்கு கோயில் உள்ளது.
● திருமஞ்சன கோபுரத்தின் வழியாக, தினமும் அபிஷேக நீர் கொண்டு வரப்படுகிறது. இதை சுவாமி அபிஷேகத்திற்கு பயன்படுத்துவது இல்லை. நடை திறக்கும் முன், கதவின் முன்னால் தெளிக்கப்படும்.
● திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி (24 ஏக்கர்).
● சிவனுக்குரிய 64 வடிவங்களில் ஒன்று அண்ணாமலையார். லிங்கோத்பவ மூர்த்தி என்றும் குறிப்பிடுவர். சிவன் கோயில்களில் கருவறையின் பின்புறம் இவருக்கு சன்னதி இருக்கும்.
● திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் பாதம் உள்ளது. பிரதோஷ காலத்தில் நந்திக்கு அபிஷேகம் நடத்தப்படும். பிரம்மோற்ஸவத்தின் போது இவ்வூரில் நாயன்மார் பவனி வருவர். குழந்தை வரத்துக்காக பெண்கள் கரும்பு தொட்டில் வழிபாடு நடத்துவர்.
● விசிறி சாமியார் என்னும் யோகி ராம்சுரத்குமார், சம்பந்த விநாயகர் சன்னதி முகப்பில் தங்கியிருந்தார்.