பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
சென்னை : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று, தீபம் ஏற்றப்பட்டது. இன்று, சிவன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி, தீபத் திருவிழா நடக்கிறது. கார்த்திகை மாத பவுர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் இணைந்த நாளில், தமிழர்கள் கோவில்கள் மற்றும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி கொண்டாடும் விழா, தீபத் திருநாள். இந்த விழா, குமராலய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என, மூன்று வித கோவில்களில் கொண்டாடுவர். நேற்று, பரணி முடிந்து கார்த்திகை நட்சத்திரம் துவங்கியதால், சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
நேற்று மாலை, வடபழனி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள் மற்றும் பிள்ளையார் சன்னிதியில் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, வடபழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கார்த்திகை தீபத் திருநாளையடுத்து, பலர் வீடுகளில் தீபங்களை ஏற்றியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். இன்று, கார்த்திகையும், முழு பவுர்ணமியும் இருப்பதால் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி, தீபம் ஏற்றி கொண்டாடப்பட உள்ளது.