பதிவு செய்த நாள்
06
டிச
2017
11:12
கோவை: ‘‘பகவானிடம் உண்மையான பக்தி இருந்தால் சித்தசுத்தி கிடைக்கும்,’’ என, ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள்
பேசினார். கோவை, ராம்நகர் கோதண்டராம சுவாமி கோவிலில், கர்நாடகா, சிக்மகளூர் ஹரிஹரபுரம் ஸ்ரீமடம் ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை நேற்று துவங்கியது. வரும், 12ம் தேதி வரை , தினமும் மாலை , 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கும் பூஜையில் அம்மன் வழிபாடு நடக்கிறது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிக்ஷா வந்தனம், பாத பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
பூஜைக்கு முன், சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசியதாவது: பிரம்மம் என்றால் பரமாத்மா. அந்த பரமாத்மாவின் விஸ்வரூபமே
ஆனந்தம். நம் உள்ளத்தில் ஆத்ம ஸ்வரூபத்தில் அந்த பரமாத்மா நிலைத்துள்ளார். நம்முடைய ஸ்வரூபம் ஆனந்த ஸ்வரூபம். நம் வாழ்வில், துக்கம், கஷ்டம் வேண்டாம் என்கிறோம். தினமும் ஆனந்தம் கிடைக்க முயற்சிக்கிறோம். உண்மையான ஆனந்த ஸ்வரூபத்தை அனுபவம் மூலம் பெறலாம். அதற்கு சுத்தமான மனம் வேண்டும்.
மேலும், தர்மத்தை கடைபிடித்து வாழவேண்டும். சித்தசுத்தி வேண்டுமெனில் தர்மத்தை கடைபிடித்து வாழவேண்டும். ராமனின் ஸ்வரூபமே தர்மஸ்வரூபம். ராமனிடம் சுத்தமான பக்தி தேவை. பகவானிடம் உண்மையான பக்தி இருந்தால் சித்தசுத்தி கிடைக்கும். சித்தசுத்தியை பரிபூரணமாக அடைய ராமனிடம் பக்தி தேவை. இவ்வாறு, சுவாமிகள்அருளாசி வழங்கினார். முன்னதாக, நேற்று மாலை கோவிலுக்கு வருகைபுரிந்த சுவாமிகளுக்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.