பதிவு செய்த நாள்
08
டிச
2017
01:12
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில் நிலத்தை, ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமல் பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளதாக, கோவில் நிர்வாகம், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், இக்கோவிலை நிர்வகிக்கிறது. கடம்பாடி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இக்கோவிலுக்குரிய, 60 ஏக்கர் நிலம் உள்ளது.
அப்பகுதி விவசாயிகள், குறைந்தபட்சம், 20 சென்ட் முதல், அதிகபட்சம், 1 ஏக்கர் வரை என, ஆண்டு குத்தகைக்கு பெற்று, நெல் பயிரிடுகின்றனர். இந்நிலையில், சிலரை தவிர்த்து, பெரும்பாலானோர், ஆறு ஆண்டுகளாக குத்தகை தொகை செலுத்தாமலும், நிர்வாகம் நடத்தும் பொது ஏலத்தில் பங்கேற்காமலும் அலட்சியப் படுத்துகின்றனர். இதனால், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறும்போது, ‘குத்தகை செலுத்தாமலும், நிலத்தை ஒப்படைக்காமலும், தொடர்ந்து பயன்படுத்துவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கோவில் நிலத்தை மீட்டு, வனத்துறை மூலம் சவுக்கு பயிரிடுவோம்’ என்றனர்.