பதிவு செய்த நாள்
20
டிச
2017
11:12
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சனி பகவான் காலை 9:53 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகினார். உலக நன்மை வேண்டி சனி பெயர்ச்சியை முன்னிட்டு வழி விடு முருகன் கோயிலில் சிறப்பு ேஹாமம் நடந்தது. மதியம் 2:55 முதல் இலவச சாந்தி, பரிகார ேஹாமங்கள் நடந்தது. பின் மாலை சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில் தர்மகர்த்தா கணேச அடிகள், லயன் கே.விவேகானந்தன், மின் வாரிய பொறியாளர் கள் கங்காதரன்,ஆர்.பாண்டியன், திவான் மகேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர். சனி பாதிப்பில் இருந்து விடுபட ஏராளமான பக்தர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். மாலை 5:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காகம் டிரஸ்ட் சீனிவாச சாஸ்திரி செய்திருந்தார்.
முதுகுளத்துார்:சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, முதுகுளத்துார் சங்கரலிங்கம் அய்யனார் கோயிலில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதேபோல் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள், முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வடக்கூர் வழிவிடுமுருகன், காந்திசிலை செல்வவிநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ராஜ அலங்காரம் செய்யபட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர், வழிவிட்ட அய்யனார் கோயில்களில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு, பூஜைகள் நடந்தது. வழிவிட்ட அய்யனார் கோயிலில் பக்தர் ஒருவர் வெள்ளி குதிரை வாகனத்தை கோயிலுக்கு அர்ப்பணித்தார்.
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. பழமையான முன்னை மரத்தினை தொட்டு வணங்கிய பின்பு, எள், எண்ணெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் காணப்பட்டார். அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. பூஜைகளை சேகர், சந்தோஷ் குருக்கள் செய்திருந்தனர்.