பதிவு செய்த நாள்
25
டிச
2017
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகரிப்பால், மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மாட வீதி, போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, நேற்று விடுமுறை தினம் என்பதால், 300க்கும் மேற்பட்ட பஸ்களில் வெளி மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால், மாட வீதி போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது. இந்நிலையில், மாணிக்கவாசகர் திருவெம்பாவையை திருவண்ணாமலையில் இயற்றியதை நினைவு கூறும் வகையில், மாணிக்கவாசகருக்கு விழா துவங்கியது. இதை முன்னிட்டு, மாட வீதி வலம் வந்து மாணிக்க வாசகர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜன., 2ல், நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில், திருவாதிரை நட்சத்திர தினத்தன்று எழுந்தருள்கிறார். அப்போது அவருக்கு, மஹா தீபத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம் முதலில் சாத்தப்பட்டு, பின், பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். அப்போது, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடும் நிகழ்ச்சியும் நடக்கும்.