பதிவு செய்த நாள்
17
டிச
2011
01:12
பொதுவாக எல்லா கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்யலாம் என்றாலும், அதற்கென உள்ள கோயிலில் பாராயணம் செய்தால் பலன் இரட்டிப்பாகும். திருப்பாவை மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் பாடியது. திருவெம்பாவையோ சிவனுக்காக மாணிக்கவாசகர் பாடியது. திருப்பாவைக்குரிய லட்சுமியும், திருவெம்பாவைக்குரிய சிவனும் ஒன்றாக அருள்பாலிக்கும் தலம் திருச்சி மாவட்டம் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயிலாகும். இத்தலத்தில் மகாலட்சுமியே சிவனை குறித்து தவம் இருந்து ஐஸ்வரிய மகுடம் பெற்று, ஐஸ்வரிய லட்சுமியான தலம் என்பதால், மார்கழி மாதம் இங்கு மகாலட்சுமி முன்பு திருப்பாவையும், சிவனின் முன்பு திருவெம்பாவையும் பாடினால் சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என தல புராணம் கூறுகிறது.
தல வரலாறு: தானே உயர்ந்தவன் என்ற ஆணவத்துடன், தன் மருமகனான சிவனையே அழைக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவனது மகள் பார்வதி நியாயம் கேட்டுச் சென்று அவமானப்பட்டு திரும்பினாள். சிவனின் சாபத்தால், பூலோகத்தில் பர்வதராஜனுக்கு பார்வதி என்ற பெயரில் மகளாகப் பிறந்தாள். பர்வதமலையில் தவம் செய்தாள். சிவனும் கயிலையில் தவத்தில் ஆழ்ந்துவிட்டார். சிவசக்தி பிரிந்தால் உலகில் சந்ததி பெருகாது என்பதால் தேவர்கள் மன்மதன் மூலம் சிவனை எழுப்பினர். சிவனோ, கோபத்தில் மன்மதனை எரித்துப் பொசுக்கினார். அவன் எய்த பாணம் திசைமாறி பார்வதியின் மேல் விழுந்தது. தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றாள் தேவி. காம பாணம் விழுந்ததால், சிவகாம சுந்தரி ஆகி, ஈசனுடன் இணைந்தாள். இறைவன் காமேஸ்வரர் என்னும் திருநாமம் பெற்றார். மன்மதனை எழுப்பி ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி செய்தார். அவனுக்கு பல மருத்துவக்கலைகளைக் கற்பித்தார். இதனால் வைத்தியநாதர் என்ற பெயரும் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இந்தக்கோயில் எழுந்தது.
சித்தர்கள் பூமி: திருக்காமேஸ்வரர், சந்நிதியில் சிவபோக சக்கரம் உள்ளது. இதை போகர் சித்தர் பிரதிஷ்டை செய்து அதில் அமர்ந்து தவம் செய்தார். இதன்பிறகே பழநியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாக போகர் ஏழாயிரம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளது. திருக்காமேஸ்வரர் சந்நிதியில் அமர்ந்து தவம் செய்தால் எத்தகைய கடினமான சித்திகளும் கைகூடும் என்பதால், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்துள்ளனர். கோயிலில் தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன.
மாணவர்களுக்கான பூஜை: இங்குள்ள சுரங்கத்தில் சிவலிங்க வடிவமாக போகர் காட்சி தருகிறார். இங்குள்ள பைரவரை ஞானபைரவர் என்பர். மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை 4.30 - 6.00 மணிக்குள் (ராகுகாலம்) 16 மிளகு தீபம் ஏற்றி செவ்வரளி மாலை அணிவித்து வழிபட்டால் கல்வியில் அபிவிருத்தி ஏற்படும்.
ஐஸ்வர்யலட்சுமி சிறப்பு: சிவபெருமானின் தரிசனம் வேண்டி, மகாலட்சுமி, இத்தலத்துக்கு வந்து ஈசனைக் குறித்து தவம் செய்தாள். இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே, தன்னை ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ இலை மழை பொழிந்து பூஜை செய்தாள். அதன் பின் ஈசன் அவளுக்கு காட்சி தந்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால், ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமிதேவிக்கு அளித்து, சகல செல்வத்துக்கும் அதிபதி ஆக்கினார். இத்தலத்திலேயே தங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை அருளும்படி கூறினார். இவள் அபய, வரத திருக்கரங்களோடு, மேலிரு கரங்களில் தாமரை மலருடன் காட்சி தருகிறாள். இங்குள்ள தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் எனப்படுகிறது. இதனால் இவளுக்கு ஐஸ்வர்யா என்ற திருநாமமும் இருக்கிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்யும் முன் வில்வமரத்துக்கே முதலில் பூஜை செய்கிறார்கள். வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றும் இத்தலத்து ஈசனுக்கு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம்.
பூஜை முறை : இத்தல சிவனை மகாலட்சுமி பிரதிஷ்டை செய்தாள். எனவே, தங்கம், வெள்ளி நகை செய்பவர்கள் தங்கள் தொழில் அபிவிருத்திக்காக இங்கு வருகிறார்கள். சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையெனில், எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத் தடையும், குழந்தையின்மையும், வியாபார வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் 16 வகையான அபிஷேகம் செய்து 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, 16 முறை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஐஸ்வர்யத்தை அள்ளித்தருவாள் இந்த ஐஸ்வர்யா. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் இங்கு திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்கின்றனர்.
இருப்பிடம் : திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் 32 கி.மீ. தூரம். (முசிறியில் இருந்து 8 கி.மீ.,)
திறக்கும் நேரம் : காலை 9- 11 மணி, மாலை 6- இரவு 7.30 மணி.
போன் : 94437 80719.