பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
ஆர்.கே.பேட்டை : கொற்றலை கரையில் அடுத்தடுத்த கிராமங்களில் உள்ள பழமையான விஜயராகவ பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, நாளை காலை, சொர்க்கவாசலில் சுவாமி எழுந்தருளுகிறார். பள்ளிப்பட்டு அருகே, கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள ஈச்சம்பாடி மற்றும் விஜயராகவபுரம் கிராமங்களில், விஜயவல்லி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில்கள் உள்ளன. ஈச்சம்பாடி பெருமாள் கோவில், சமீபத்தில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, நாளை காலை, ஈச்சம்பாடி மற்றும் விஜயராகவபுரம் கோவில்களில், சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசலில் எழுந்தருளும் பெருமாளை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதிகாலை, 3:00 மணிக்கு, சுப்ரபாத சேவை, 3:30 மணிக்கு திருமஞ்சனமும், அதை தொடர்ந்து, 4:30 மணிக்கு, சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளுகிறார். விஜயராகவபுரத்தில், பல்வேறு பஜனை கோஷ்டியினரின் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இதே போல், ஆர்.கே.பேட்டை சுந்தரராஜபெருமாள், வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில்களிலும், சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.