பதிவு செய்த நாள்
28
டிச
2017
02:12
கூடலுார் : மேல்கூடலுாரில் உள்ள கோக்காலில் நடந்த, கோத்தர் இன மக்களின் குலதெய்வ திருவிழாவில், பாரம்பரிய உடையணிந்து பழங்குடியினர் நடனமாடினர்.
மேல் கூடலுார் கோக்காலில் உள்ள, கோத்தர் மக்கள் குல தெய்வமான, ஐய்யனோர் அம்மனோர் கோவில் திருவிழா, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த, 15ல் துவங்கியது.விழா துவங்கிய நாள் முதல், வெளி நபர்கள் கிராமத்துக்குள் நுழைய அனுமதியில்லை என, கிராம நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், கிராம மக்கள் வெளியில் உண்பதை தவிர்த்து விரதமிருந்து, குலதெய்வத்தை வழிபட்டு வந்தனர்.கடந்த, 23, 24ம் தேதிகளில், கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. 24ம் தேதி இரவு மக்கள் கோவிலில் தங்கி குலதெய்வத்தை வழிபட்டு, விடிய, விடிய நடனமாடினர். நேற்று முன்தினம், கோவிலில் இரவு பூஜை செய்து, சாமியை வழிபட்டனர்.இறுதி நாளில், கிராமத்தில், கோத்தர் இன ஆண்கள், பெண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, தனித்தனியாக நடனமாடி மகிழ்ந்தனர். இவர்களில் நடனத்தை அப்பகுதி மக்கள் ரசித்தனர். மாலையில் விழா நிறைவு பெற்றது. விழா கமிட்டி யினர் கூறுகையில், கூடலுார் கோக்கால், மசினகுடி சோலுார்மட்டம் கிராம மக்கள், இணைந்து அய்யனோர், அம்மனோர் குலதெய்வ பண்டிகையை கொண்டாடி வருகிறோம். அடுத்த ஆண்டு சோலுார்மட்டத்தில் இவ்விழா நடக்கும் என்றனர்.