பதிவு செய்த நாள்
19
டிச
2011
11:12
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த விருப்பம்பட்டியில் உள்ள ஆல மரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இதை அந்த பகுதி மக்கள் தெய்வமாக பாவித்து அதற்காக பொங்கல் திரு விழாவின் போது விழா நடத்தி மகிழ்கின்றனர். பாலூட்டி வகையை சேர்ந்த வவ்வால்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் மட்டும் பழமையான மரங்களில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. பகல் முழுவதும் வெளியே இறைக்காக பறந்து செல்லும் வவ்வால்கள், இரவு நேரங்களில் குறிப்பிட்ட மரத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. போச்சம்பள்ளி அடுத்த விருப்பம்பட்டியில் ஏரியோரம் உள்ள ஆல மரத்தில் பல ஆண்டாய் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. ஊரை விட்டு சிறிது தூரம் ஆள் அரவமின்றியும், வாகனங்களில் சத்தம் இன்றியும் உள்ள ஏரியோரம் வவ்வால்கள் வாழ்வதற்கு ஏற்ற மிதமான சீதோஷ்ணநிலை நிலவி வருவதால் வவ்வால்கள் எவ்வித பிரச்னையும் இன்றி அங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகிறது. விருப்பம்பட்டியில் வசித்து வரும் வவ்வால்களை எவரும் வேட்டையாட அந்த கிராம பொதுமக்கள் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி வேட்டையாட முயன்றால், அவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்து விடுகின்றனர். அந்த பகுதி பொதுமக்களும், ஆல மரத்தில் வாழும் வவ்வால்களை தெய்மாக கருதி வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் வவ்வால்கள் வாழும் மரத்தடியில் விருப்பம்பட்டி பொதுமக்கள் ஒன்று கூடி படையல் வைத்து எவ்வித ஆரவாரமும் இன்று வழிபாடு நடத்துகின்றனர்.
விருப்பம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (50) கூறியதாவது: எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஆல மரத்தில் வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இதனால், தீபாவளி பண்டிகையின் போது கிராமத்தில் பட்டாசு வெடிப்பதில்லை. வழக்கமாக கிராமத்தில் எவராவது இறந்து விட்டால் பட்டாசு வெடித்து சடலத்தை எடுத்து செல்வர். ஆனால், விருப்பம்பட்டியில் இறப்பு நடந்தால் கூட பட்டாசு வெடிப்பதில்லை. மேளம் அடிப்பவர்கள் கூட ஊருக்கு வெளியே மட்டுமே மேளத்தை அடிப்பர். வவ்வால்களை வேட்டையாட பல முறை அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்தனர். ஆனால், பொதுமக்கள் ஒன்று கூடி அவர்களை அடித்து விரட்டினர். பொங்கலுக்கு அடுத்த நாள் வவ்வால்கள் தங்கியிருக்கும் மரத்தடியில் ஒன்று கூடும் ஊர் பொதுமக்கள் அதற்காக ஊரிலே சமைத்து எடுத்து வந்த சாதத்தை பெரிய வாழை இலையில் படையல் வைத்து வழிபடுவர். இந்த படையலில் வைக்கும் சாதத்தை சாப்பிட்டால் தீராத வியாதிகள் குணமாகும் என எங்களது முன்னோர் சொல்லி வைத்துள்ளதால் அந்த சாதத்தை சாப்பிடுவதற்காகவே எங்கள் உறவினர்கள் விழா நடக்கும் நாளில் ஒன்று கூடுவர். மேலும் நோய்வாய்ப்பட்டுள்ள வெளியூரில் வசிக்கும் உறவினர்களுக்கும் இந்த சாதத்தை கொடுத்து அனுப்புவோம். என் பாட்டனார் காலத்தில் இருந்து ஆல மரத்தில் வாழும் வவ்வால்களை தெய்வமாக கருதி வருகிறோம். அடுத்த சந்தததியிலும் இது தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.