பதிவு செய்த நாள்
19
டிச
2011
11:12
ஆண்டவரின் அருளை பரிபூரணமாக பெற்று, இறைஇன்பத்தில் திளைத்திருந்த இறைவாக்கினர்கள் பயமில்லாமல் மறை பரப்பு பணியில் ஈடுபட்டனர். கலக்கமில்லாமல் சித்ரவதைகளை தாங்கிக்கொண்டனர். தயக்கமில்லாமல் எளியவர்களுக்கு துணை நின்றனர். இந்த புனிதர்களின் வரிசையில் இடம் பெறுகிறார் பிரான்சிஸ் சவேரியார். இவர், அரச குடும்பத்தில் பிறந்து, ஸ்பெயின் மாளிகையில் வளர்ந்து, பாரீசில் கல்வி கற்பித்தவர். கிறிஸ்து இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டவுடன் அனைத்தையும் துறந்தார். சேவை உள்ளத்தோடு ஏராளமானவர்களை நல்வழிப்படுத்தி அழியா உடலுடன், கோவாவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.சிலுவையை தனது உயிர்மூச்சாக கருதியவர் சவேரியார். சிலுவை அவரின் அடையாள சின்னமாக மட்டுமல்ல. எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதமாகவும் இருந்தது. சிலுவை இல்லாமல் அவர் எந்த பகுதிக்கும் சென்றதில்லை. அவர் என்ன நினைக்கிறாரோ அனைத்தையும் அந்த சிலுவை நிறைவேற்றிக்கொடுத்தது.
கேரளாவின் திருவிதாங்கூர் ராஜாவை காப்பாற்றுவதற்காக போர்க்களத்திற்கு சென்ற சவேரியார், எதிரிகளின் முன்பாக சிலுவையை உயர்த்திபிடித்தபோது அவர்கள் அலறி அடித்து ஓடினர். அப்பாவி கிராமத்தினரை தாக்க வந்தவர்கள் திரும்பி செல்ல மறுத்தபோது, சவேரியார், மூடியிருந்த கல்லறையை நோக்கி சிலுவை யை காட்டினார். அடுத்த நிமிடம் கல்லறை பிளவுபட்டு உள்ளே அடக்கம் செய்யப்பட்டிருந்த மனிதன் உயிருடன் எழுந்து வெளியே வர, கலவரக்காரர்கள் பீதியில் ஓடினர். ஒருமுறை சவேரியார், சிலுவையை நெஞ்சில் அணைத்தவாறு, ஒரு கப்பலின் மேல்தளத்தில் நின்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது சிலுவை கைகளில் இருந்து நழுவி கடலில் விழுந்தது. சவேரியார், கலங்கிய கண்களோடு தனது சிலுவை, மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கடலின் மேற்பரப்பை பார்த்தார். துறைமுகத்தை கப்பல் அடைந்தவுடன் துயரத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நண்டு, கடலில் விழுந்த சிலுவையை தனது கால் கொடுக்கில் இடுக்கி பிடித்தவாறு சவேரியாரை நோக்கி வந்தது. அளவில்லா ஆனந்தத்தில் துள்ளி குதித்த சவேரியார், சிலுவையை பெற்றுக்கொண்டு அதை ஆசிர்வதித்தார். அன்றிலிருந்து அந்த நண்டின் முதுகு தோட்டில் சிலுவை அடையாளம் அழுத்தமாக பதிந்தது. மீனவர்களின் வலையில் சிலுவை அடையாளமிட்ட நண்டு சிக்கினால் அதை பயபக்தியோடு விடுவிப்பது இன்றும் நடந்து வருகிறது.சிலுவை கிறிஸ்தவர்களின் அடையாளம் மட்டுமல்ல. அது மீட்பின் வரலாற்று சின்னம்.