திருப்புத்துார்: தமிழகத்தின் பல வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பு இன்றி வெளிஉலகத்துக்கு தெரியாமலேயே அழிந்து வரும் நிலை பரவலாக உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் பல தொன்மையான சின்னங்கள்,கல்வெட்டுக்கள்கவனிப்பாரற்று கிடக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் மகிபாலன்பட்டி பகுதி தோட்டம்ஒன்றில் பல ஆண்டுகளாக ஒரு சமண சிற்பம் மண்ணில் புதையுண்டு கிடந்தது.
அப்போது அதை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜவேலுதமிழகத்தின் பெரிய சமண தீர்த்தங்கரர் சிலைகளில் இதுவும் ஒன்று. சுமார் கி.பி.,5ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.இந்நிலையில் கவனிப்பாரற்ற இந்த சிற்பத்தை வைத்து கோவிலாக்கியுள்ளனர் சமணப்பண்பாட்டு மன்றத்தினர். மதுரையைச் சேர்ந்தஇந்த அமைப்பினர் மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அழிந்து வரும் சமண வரலாறு சின்னங்களை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கி.பி. 8 - ஆம் நுாற்றாண்டில் சைவ, வைணவ மதங்கள் வலுப்பெற்றதும், சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது.
சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் மறையத்துவங்கின. அதன்பின்பல நுாற்றாண்டு பராமரிப்பின்றிக் கிடந்த பல சமண மதச் சின்னங்களை இவர்கள் பராமரிக்கத் துவங்கியுள்ளனர். அதில் திருப்புத்துார் மகிபாலன்பட்டி அருகே கோயிலார்பட்டியில் கிராமத்தினரிடம் பேசி பெற்ற அந்த சமண சிலையை வைத்து அங்கேயே உருவாக்கியது தான் ஆதி பகவான் கோயில். சிறிய அளவிலான பராமரிப்பில்லாத சாலை வசதியுடன் உள்ள இக்குக்கிராமகண்மாய் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் நான்கு அடி உயரத்துடன் தீர்த்தங்கரர் அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்திருக்கிறார். வெளியில் சிதைந்த சிற்பங்களுடன் அமைதியான சூழலில் இக்கோயில் உள்ளது. மதுரை சமணப்பண்பாட்டு மன்றத்தினர் கூறியதாவது: சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்ய தீர்த்தங்கரர்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.
அதில் முதலாவதாக வருபவர் தான் ஆதி பகவான் எனப்படும் விருஷப தேவர். திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள ஆதி பகவான் இவர் தான். இவருடைய சிற்பத்தை வைத்து இங்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 ஆயிரம் சமணர்களே வசிக்கின்றனர். அவர்களும் பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்கு செல்லத் துவங்கி விட்டனர். அதனால் சமண வரலாறு சின்னங்களையாவது பாதுகாக்க முயல்கிறோம்’ என்கின்றனர் ஆதங்கத்துடன் சாதாரணமாக புழுதியில் கவனிப்பாரற்று கிடந்த அந்த சிலைக்குப் பின் இப்படி புராணத் தகவல் இருப்பது ஆச்சர்யமானது. நமக்கு 24 வது தீர்த்தங்கரர் எனப்படும்மகாவீரரைத் தான் தெரியும். அதற்கு முன்பாக முதலில் தோன்றியவர் ரிஷப தேவர் எனப்படும் ‘ஆதிபகவான்’ என்பதும் அவருக்கு திருப்புத்துார்பகுதியில் கோயில் உள்ளதும் ஆச்சர்யமானது தானே. திருப்புத்துாரிலிருந்து மகிபாலன்பட்டி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலார்பட்டியிலுள்ள இந்த சமணக்கோயிலை நீங்களும் ஒரு முறை சென்று பார்க்கலாம்.