பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 150 ஆண்டுகளுக்கு பின், புதிதாக உருவாக்கப்பட்ட மரத்தேரை நிறுத்த இடம் இல்லாததால், தேர் திருப்பணி முழுமை பெறாமல் உள்ளது. சாலை நடுவில் தேர் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அப்பகுதியில் உள்ள நகராட்சி பூங்காவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தேரை நிறுத்த, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது ஏகாம்பரநாதர் கோவில். இக்கோவிலுக்கு சொந்தமான மரத்தேர், 150 ஆண்டுகளுக்கு முன் தீ விபத்தில் சாம்பலானது. புதிய தேர் உருவாக்க வேண்டும், எனப் பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர். கோவில் நிர்வாகம் நிதியில்லை எனக் கூறி வந்தது. சென்னையைச் சேர்ந்த சிவார்ப்பணம் அறக்கட்டளை நிர்வாகம், புதிய மரத்தேரை உருவாக்கி தர முன் வந்தது. இந்து சமய அறநிலையத்துறையும் தேர் திருப்பணிக்கு அனுமதி அளித்தது.அறக்கட்டளை நிர்வாகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிகளை துவக்கியது. தேர் திருப்பணி கடந்த ஆண்டு முடிந்தது. தேரின் பீடம் 27 அடி உயரம், 24 அடி அகலத்தில், எட்டு பட்டைகளைக் கொண்டுள்ளது. இலுப்பை மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. தேருக்கு 600 கன அடி மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தேரின் முன்பு நான்கு குதிரைகள் ஓடுவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர் அடிப்பாகத்தில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, தசாவதாரம், ஆதிசங்கரர் காமாட்சியை பூஜை செய்யும் காட்சி ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர் திருப்பணி முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி வெள்ளோட்டம் நடந்தது. அதே மாதம் 25ம் தேதி தேரோட்டம் நடந்தது.தேரில் மேற்கொண்டு பணிகளை முடிக்க, தனி இடம் ஒதுக்கித் தரும்படி ஸ்தபதிகள் கோரினர். கோவில் நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கப்படவில்லை. மங்களதீர்த்தம் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றினால், அங்கு தேரை நிறுத்தலாம் எனப் பக்தர்கள் தெரிவித்தனர். கோர்ட்டில் வழக்கு உள்ளதால் ஆக்ரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல், எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.வழக்கு முடிவுக்கு வந்த பிறகும், ஆக்ரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேரடியில் தேர் நிறுத்தும் இடம் அருகிலிருந்த ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். தேரோட்டத்தின்போது தேரை அலங்கரிக்க வசதியாக, படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என ஸ்தபதிகள் கோரினர். அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தேர் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இச்சூழலில் அப்பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா இடத்தை, தேர் நிறுத்த ஒதுக்கும்படி, கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று பூங்கா இடத்தை, தேர் நிறுத்தும் இடமாக மட்டும் பயன்படுத்த வேண்டும், என்ற நிபந்தனை அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறைக்கு ஒப்படைக்க, நகரமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.பூங்கா அகற்றப்பட்டதும், அந்த இடத்தில் தேர் நிறுத்தப்படும், எனக் கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாகம் விரைவாக பூங்காவை அகற்றி, இடத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும், எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.