பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
சேலம் : காதலை சேர்த்து வை... மாமியார், நாத்தனார் வாயை பூட்டி வை... என, சேலம் பூட்டு முனியப்பனுக்கு, இரண்டு லட்சம் மனுக்களை பக்தர்கள் போட்டுள்ளனர். சேலம் - ஏற்காடு சாலையில், அஸ்தம்பட்டியில், கலெக்டர் பங்களா முன், அய்யந்திருமாளிகை குடியிருப்பு நுழைவாயிலில், "பூட்டு முனியப்பன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில், "பூட்டு போட்டு, வழிபடும் முறையால் தான் பிரபலமானது. பூட்டு முனியப்பன் சாமி பிரபலமானதால், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். ஆடு, கோழி வெட்டி பலியிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், பூட்டு போட்டனர். நாளடைவில், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை மற்றும் கர்நாடகா, கேரள மாநில பக்தர்களும் வருகின்றனர். முதலில், ஆலங்குட்டை முனியப்பன் என்று தான், பக்தர்கள் அழைத்தனர். பின்னர் தான் பூட்டு முனியப்பன் என்று பெயர் மாறியது. ஆலங்குட்டை முனியப்பன், பூட்டு முனியப்பன் ஆனதற்கு காரணம், தேர்வில் பாஸ் ஆன, 2 மாணவியர், வேண்டுதல்படி போட்ட பூட்டு தான் காரணம். பின், மற்றவர்களுக்கும், "பூட்டு வழிபாடு பிடித்துப் போனது. தினமும் காலை, 6 மணி முதல், மாலை 6 மணிவரை கோவில் திறந்து இருக்கும். பூஜை பொருட்களுக்கு, 100 ரூபாய் செலவாகும். பூஜை பொருட்களையம், பூட்டையும் கொடுத்தால், சாமி முன் வைத்து, பூஜை துவங்கும். பின், பூட்டில் பெயர் எழுதி, மனுவையும் சேர்த்து, பிளாஸ்டிக் கவரில் போட்டு கம்பியில் பூட்டுவர். சாவியை, எடுத்துச்சென்று விடுவர். 30 நாள் கழித்து, வேண்டுதல் நிறைவேறினால், பூட்டில் தங்கள் பெயரை சரிபார்த்து, திறந்து, தொட்டியில் போட்டு விடுவர்.
பூசாரி கிருஷ்ணன் கூறியதாவது: சுயம்புவாக உருவான, அரையடி முனியப்பன் சிலை தான் மூலவர். குழந்தை பாக்கியம், வேலை, நோய் குணமாக பூட்டு போடுகின்றனர். குடும்பத்தில் மாமியார், மருமகள் தகராறு சகஜம். மாமியார் வாயை கட்டி வை... என்று மருமகள், கோவிலில் பூட்டு போடுவார். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும், 2 லட்சம் பூட்டு மனுக்கள் வந்துள்ளன. இவ்வாறு பூசாரி கூறினார்.