பதிவு செய்த நாள்
05
ஜன
2018
11:01
புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 11 - 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை அய்யப்பன் கோவிலில் பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, அனுமதி அளிக்கப்படுகிறது. 11 - 49 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. பெண்கள் செல்ல, ஏன் அனுமதிக்கக் கூடாது என, கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீண்ட காலமாகவே, இது குறித்து சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடக்கும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு வழிபாட்டை காண்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் வரும் போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் "தேவையற்ற வாதங்களை தவிர்க்க" மாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது வயது சான்றிதழை காண்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைள் துவங்கும் இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.