பதிவு செய்த நாள்
22
டிச
2011
11:12
குருவாயூர்: கிருஷ்ணனின் நண்பரான குசேலர் தினத்தை ஒட்டி, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவல் படைத்து வழிபட்டனர். கேரளா திருச்சூர் மாவட்டத்தில், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், மார்கழி மாதம் முதல் புதன் கிழமை குசேலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான உற்சவம் நேற்று நடந்தது. காலை முதல் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அவலுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கொண்டு வரும் அவலை பெற தேவஸ்வம் போர்டு சிறப்பு கவுன்டர்களை திறந்துள்ளது. அவை எல்லாம் சன்னதியில் பந்தீரடி பூஜை, உச்சிக்கால பூஜை மற்றும் ராக்கால பூஜை ஆகியவற்றின்போது சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். ஒவ்வொரு பக்தரும் தங்களை குசேலராக பாவித்து, சுவாமிக்கு அவல் கொண்டுவருவதாக ஐதீகம். நைவேத்தியத்திற்காக, பக்தர்கள் கொண்டு வரும் அவலுடன் தேங்காய், நெய், வெல்லம், சுக்கு, சீரகம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும். இதற்காக, 2 லட்ச ரூபாய் செலவிடப்படும். பின்னர் பிரசாதமாக இன்று பக்தர்களுக்கு வழங்கப்படும். தொடர்ந்து நேற்றிரவு சுவாமி உலா, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.