குச்சனூரில் சனிப்பெயர்ச்சி: பக்தர்கள் கூட்டம் குறைந்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2011 11:12
தேனி: தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில், நேற்று காலை சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. முல்லைப்பெரியாறு அணை பிரச்னையால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தேனி அருகே குச்சனூரில் நேற்று காலை சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. காலை 7.51 மணிக்கு சனிபகவான் கன்னிராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியானார். அப்போது தலைமை பூஜாரி திருமலை ஜெயபால்முத்து தலைமையில் சிறப்பு பூஜைகளும், மகாதீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்தே கோயிலுக்கு வரத்தொடங்கினர். மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருவதால், கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும் பல ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர். கோயிலில் இருந்து 600 மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் வரிசையாக நின்றிருந்தனர். சேலம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் இருந்து அதிக பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் முன் பக்தர்கள் வரிசையில் நின்று வழிபாடு நடத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் நிறுத்தவும், வந்து செல்லவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.