காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர் கோவிலில் சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கார், பஸ் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். தோஷங்களை கழிக்க, நெல்லெண்ணெய் தேய்த்து நளன் குளத்தில் நீராடி, தாங்கள் உடுத்தியிருந்த ஆடைகளை குளத்திலேயே விட்டனர். அந்த ஆடைகளை கோவில் ஊழியர்கள் மூட்டை, மூட்டையாக கட்டி அவ்வப்போது அகற்றினர். நேற்று அதிகாலையில் மட்டும் 2 லட்சம் பக்தர்கள் குளத்தில் நீராடினர். சனிபகவான் நேற்று முன்தினம் இரவு தங்க காக்கை வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதிகாலை 3 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லெண்ணெய், பழங்கள், தேன், மற்றும் வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு நேற்று காலை 7.51 மணிக்கு பெயர்ச்சியானபோது மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சனீஸ்வரனை தரிசனம் செய்தனர். வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய சனிபகவானை நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசித்து நெய் தீபம் ஏற்றினர்.