பதிவு செய்த நாள்
17
ஜன
2018
02:01
திருக்கனுார் : காணும் பொங்கலை முன்னிட்டு, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான திருவக்கரையில் சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளி யம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.அதேபோல், இந்தாண் டும் நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலுக்கு, இருசக்கர வாகனம், மாட்டு வண்டி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம், கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தனர். காணும் பொங்கலை முன்னிட்டு, சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் அருகேயுள்ள மலைப்பகுதி, புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா, சங்கராபரணி ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும், பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினர். பொதுமக்களின் வசதிக்காக, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.வானுார் மற்றும் கண்டமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக எல்லைப் பகுதியான திருக்கனுார் பகுதியில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.