வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நேற்று நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.24 மணிக்கு சனிபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசியில் உள்ள சித்திரை நட்சத்திரம் 3 ம் பாதத்திற்கு இடப்பெயர்ச்சி ஆனார். இதை முன்னிட்டு காலை 6.30 மணியிலிருந்து சுவாமிக்கு பூரண கும்பம் வைத்து ஜெபம் செய்து பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு 18 விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பரிகார ராசிக்காரர்களுக்கு பிரத்யேக அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பக்தசபாவினர், கோயில் நிர்வாக அதிகாரி சரவணன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் சனி பெயர்ச்சி சிறப்புபூஜை நடந்தது. சனீஸ்வரர் நேற்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி நேற்று காலை மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதையொட்டி நேற்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், ஊழியர்கள் செய்திருந்தனர்.