பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
புளியரை :இலத்தூர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கோட்டை யூனியன் இலத்தூரில் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4.58 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு சனீஸ்வரர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சனிப்பெயர்ச்சி நேரத்தில் சிறப்பு தீபாராதனையும் தொடர்ந்து அர்ச்சனை வழிபாடும் நடந்தது. இரவு சனி பகவான் உலாவும், நாதஸ்வர கச்சேரியும் நடந்தது. அதிகாலையில் இருந்து இரவு வரை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சனி பகவானுக்கு எள், எண்ணெய் விட்டு, அர்ச்சனை செய்து பக்தர்கள் பரிகார வழிபாடு நடத்தினர். விழாவில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டை யூனியன் தலைவர் முருகையா, துணைத் தலைவர் வக்கீல் ஆதிபாலசுப்பிரமணியன், பஞ்.,தலைவர்கள் சீவநல்லூர் சட்டநாதன், இலத்தூர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன், சேஷன், சப்பாணி, பொற்கலை, சிதம்பரம், திருமலைக்குமார், சுப்புலட்சுமி, பஞ்., செயலாளர் கண்ணன், சீவநல்லூர் ராமகிருஷ்ணன், இலத்தூர் கருப்பசாமி, மணிகண்டன், கோயில் உப தொகுதி அலுவலர் கெங்கமுத்து, கவியரசு டிஜிட்டல் கண்ணன், மூர்த்தி மினி பஸ் சத்தியமூர்த்தி, ஆனந்தன், முத்துக்குமாரசாமி, பாலாஜி, சத்தியஸ்ரீ, வக்கீல் சைலபதி சிவஞானம், மும்பை முருகேசன் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.