பதிவு செய்த நாள்
22
டிச
2011
12:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதியிலுள்ள கோவில்களில், சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு வழிபாட்டு பூஜைகள் நடந்தன. நவகிரகங்களில், ஒன்றான சனீஸ்வரர், கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறும் சனிப்பெயர்ச்சி நேற்று நடந்தது. பொள்ளாச்சி - கோவை ரோட்டிலுள்ள மாகாளியம்மன் கோவிலில், காலை 6.00 மணிக்கு நவகிரக ஹோமத்துடன் வழிபாடு துவங்கியது. காலை 7.00 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8.00 மணிக்கு 1008 அர்ச்சனை வழிபாடு நடந்தது. பூஜையில், பரிகார ராசிகாரர்களான மேஷம், கடகம், கன்னி, துலாம், மீனம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. கோவில்பாளையம் இன்ப விநாயகர் கோவில், ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சி அம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சனிப்பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக பூஜையும், பரிகார பூஜையும் நடந்தன. உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்களது பெயர்களுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து கொண்டனர். உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சனிப்பெயர்ச்சியையொட்டி, 20ம் தேதி சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று சனிபகவானுக்கு சிறப்பு யாகம், பூர்ணாகுதி, நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பின் காலை 9.00 மணிமுதல் சனிப்பெயர்ச்சி சிரம நிவர்த்த வேண்டி குடும்ப யாகம் நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஒவ்வொரு முறையும் 10ஆயிரம் எள்ளு தீபங்கள் வீதம் ஐந்துமுறை ஏற்றப்பட்டன. கொமரலிங்கம் காசிவிஸ்வநாதர் மற்றும் தத்தாத்ரேய சுவாமி கோவில்களில், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் உள்ளிட்ட பரிகார ராசிக்காரர்கள் தங்களது பெயருக்கு அர்ச்சனை செய்தும், எள்ளு தீபம் ஏற்றியும் வழிபட்டனர். மடத்துக்குளம், கொழுமம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.