திருத்தணி மலைப்பகுதியை ஆட்சி செய்த வேடர் தலைவன் நம்பிராஜனின் மகள் வள்ளி. அவளை மணம் புரிய வந்த முருகன், முதியவர் வடிவில் தோன்றினார். அதை அறியாத வள்ளி பயந்தோட, யானை மூலம் தடுத்தார். வள்ளி முதியவரை தழுவிக் கொண்டாள். இறைவனின் ஸ்பரிசம் பட்டதும் வள்ளிக்கு ஞானம் உண்டானது. அதன் பின் நம்பிராஜன் தலைமையில் வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்தது. இதன் அடிப்படையில் இது திருமணத்தலமாக உள்ளது. திருச்செந்தூரில் சூரனுடன் போரிட்ட முருகன், இங்கு மனம் தணிந்த நிலையில் அருள்வதால் “திருத்தணிகை மலை” என பெயர் வந்ததாகச் சொல்வர். ஐஸ்வர்யம் பெருகவும், செவ்வாய் தோஷம் நீங்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும் இங்கு வழிபடுகின்றனர்.