பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. சென்னிமலை மலை மீதுள்ள, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடக்கிறது. நடப்பாண்டு விழா, சேவற்கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
விழாவை சம்பிரதாய முறைப்படி, செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்த நாட்டாமை,பெரியதனகாரர்கள், பெரியவர்கள் சேவற் கொடியேற்றி, விழாவை துவக்கி வைத்தனர். முன்னதாக விழாவுக்காக, சென்னிமலை கிழக்கு ராஜா வீதி, கைலாசநாதர் கோவிலில் இருந்து, சாமி புறப்பாடு மற்றும் தீர்த்தக்குடங்கள், ஊர்வலமாக மலைக்கு கொண்டு செல்லப்பட்டன. மலைக்கு சென்றபின், முளைப்பாரி பூஜை, காப்புகட்டும் நிகழ்ச்சி மற்றும் மயூரயாகம் நடந்தது. அதன் பின் முருகன், வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, காப்பு கட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். அதன் பின் மதியம், 1:40 மணிக்கு, சேவற் கொடி, கோவிலை வலம் வந்தது. பின்னர் முருகன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் சேவற் கொடி, சிவன் ஆலயம் முன், நந்தி கொடியும் ஏற்றி, 15 நாட்கள் நடக்கும் தைப்பூச விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். நேற்று செவ்வாய் மற்றும் சஷ்டி என்பதால், கோவிலில் கூட்டம் அலைமோதியது.