பதிவு செய்த நாள்
25
ஜன
2018
11:01
காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு, மதுரா கோட்டை மேடு பாலாற்றில், 1.6 அடி உயரத்தில், பழமையான கிருஷ்ணர் கற்சிலை, பாதுகாப்பின்றி திறந்த வெளியில் உள்ளது.காஞ்சிபுரம் அருகே உள்ளது விப்பேடு, மதுரா கோட்டைமேடு பகுதி. இங்குள்ள பாலாற்றில், அப்பகுதிவாசிகள், 10 ஆண்டுகளுக்கு முன், மாட்டு வண்டியில், மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது, 1.6 அடி உயரமுள்ள, சங்கு சக்கரத்துடன், நின்ற நிலையில், குழல் ஊதும், பழமையான கிருஷ்ணர் கற்சிலையை கண்டெடுத்தனர்.பின், அச்சிலையை எடுத்து சென்ற கிராமத்தினர், ஊரில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினர். தற்போது, அந்த கிருஷ்ணர் சிலையை பாலாற்றில் வைத்துள்ளனர்.இந்த சிலை எந்த நுாற்றாண்டை சார்ந்தது, பாலாற்றில் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து, இக்கிராமத்தை சேர்ந்த, வி.கே.பூங்காவனம் கூறியதாவது:பாலாற்றில் கண்டெடுக்கப்பட்ட கிருஷ்ணர் சிலையை, ஊரில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்திருந்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன், கோவிலை ஒட்டியுள்ள ஆலமரம் சாய்ந்ததில், கோவில் இடிந்துவிட்டது. இதனால், கிருஷ்ணர் சிலையை எடுத்துச் சென்று, ஆற்றில் பீடம் அமைத்து, அங்கேயே வைத்து விட்டோம்.ஆண்டுதோறும் மாட்டு பொங்கலன்று, ஒரு நாள் மட்டும், மாடுகளை ஓட்டிச்சென்று, அங்கு வழிபாடு நடத்திவிட்டு வருவோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -