பதிவு செய்த நாள்
25
ஜன
2018
11:01
தாம்பரம்: திருநீர்மலை பெருமாள் கோவிலில், ரதசப்தமி பெருவிழா, நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், ரங்கநாதபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த பெருமாள் கோவிலில், ரதசப்தமி பெருவிழா, நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, கோவிலின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, 6:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனத்தில், ரங்கநாதசுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, 8:00 மணிக்கு, ஹனுமந்த வாகனமும்; 10:00 மணிக்கு, கருட சேவை; பிற்பகல், 12:00 மணிக்கு, சேஷ வாகனத்திலும், மாட வீதிகளில் சுவாமி உலா நடந்தது. மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை கோவிலுக்கு எதிரே உள்ள புனித தீர்த்த குளத்தில், திருமஞ்சனம் தீர்த்தவாரி நடை பெற்றது. மாலை, குதிரை, சிம்மம், சந்திரபிரபை வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, நீர்வண்ணபெருமாள் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன.