பதிவு செய்த நாள்
27
ஜன
2018
11:01
பழநி,தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி, முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், பறவைக்காவடி, மயில்காவடி, பால்குடங்கள் எடுத்து வருகின்றனர்.
பழநி தைப்பூசவிழா நேற்றுமுன்தினம் (ஜன.,25ல்) முதல் பிப்.,3வரை நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராம்நாடு உள்ளிட்ட வெளிமாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகாநதியில் புனிதநீராடி அலகு குத்தியும், காவடிகள், பால்குடங்கள் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நேற்று தை கார்த்திகையை முன்னிட்டு, திருச்சியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உடல் முழுவதும் அலகு குத்தி 6அடி உயரமுள்ள காகிதப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியெடுத்துவந்தார். மதுரை, சிவகங்கை மாவட்ட பக்தர்கள் பால்குடங்கள், அலகுகுத்தி காவடிகள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விடுமுறை நாளாகவும் இருந்ததால் பக்தர்களும் குவிந்தனர். வின்ச், ரோப்கார் ஸ்டேஷனில் 2மணிநேரத்திற்குமேலாகவும், பொதுதரிசனவழியில் மூன்றுமணிநேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். இரவு திருவிளக்குபூஜை மற்றும் தங்கரத புறப்பாடை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.