பதிவு செய்த நாள்
29
ஜன
2018
11:01
ராமேஸ்வரம்: வரும், 31ல், தைப்பூசத்தன்று சந்திர கிரஹணம் வருவதை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை சாத்தப்படுகிறது.வரும், 31ல், மாலை, 5:16 முதல் இரவு, 8:42 மணி வரை சந்திரகிரஹணம் ஏற்படுவதால், அன்று தைப்பூசத்தை ஒட்டி, ராமேஸ்வரம் கோவிலில் அதிகாலை, 2:30 மணிக்கு நடை திறந்து ஸ்படிகலிங்கம், கால பூஜைகள் நடக்கும்.பின், காலை, 7:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் லெட்சுமனேஸ்வர் கோவிலுக்கு புறப்பாடானதும், நடை சாத்தப்படும்.
பகல், 11:00 மணிக்கு லெட்சுமனேஸ்வர் தீர்த்த குளத்தில், அலங்கார தைப்பூச தேரில் சுவாமி, அம்மன் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வருவர்.பின், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி, கோவிலுக்கு வந்ததும் நடை திறந்து, மாலை, 3:00 முதல், 5:00 மணி வரை பக்தர்கள், தரிசிக்கலாம். மாலை, 5:05 முதல் நடை சாத்தப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவிலில் இருந்து தீர்த்தவாரி சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, இரவு, 7:00 மணிக்கு தீர்த்தவாரி கொடுப்பார்.இரவு, 9:00 மணிக்கு கோவிலில், சந்திர கிரஹண அபிஷேகமும், பள்ளியறை பூஜையும் நடக்கும் என, கோயில் இணை ஆணையர், மங்கையர்கரசி தெரிவித்தார்.தற்போது, 60 ஆண்டு களுக்கு பின், சந்திர கிரஹணம், தைப்பூசம் ஒரே நாளில் வருவதால், பகலில் தைப்பூச தேரோட்டம் நடக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கோவில் குருக்கள் தெரிவித்தனர்.