பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
பழநி: தைப்பூச விழாவைக்காண தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநில பக்தர்களுடன், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாட்டவரும் வருகின்றனர். நேற்று சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள், கிரிவீதிகளில் காவடி எடுத்து வந்த பக்தர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பழநி தைப்பூச திருவிழாவைக் காண வெளிநாட்டு பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். பெரியநாயகியம்மன் கோயிலில், இன்று இரவு திருக்கல்யாணமும், நாளை தைப்பூசத்தேரோட்டமும் நடக்கிறது. பழநி தைப்பூசவிழாவிற்காக பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துஉள்ளது. மலைக்கோயிலில் மூன்று முதல் நான்குமணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.முக்கிய நிகழ்ச்சியான, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று இரவு 7:45மணிக்குமேல் 8:30மணிக்குள் திருக்கல்யாணமும், இரவு 9:30மணிக்கு வெள்ளிரதத்தில், முத்துகுமாரசுவாமி வள்ளி, தெய்வானையுடன் திருவுலாவும் நடக்கிறது.
நேரம் மாற்றம் : நாளை (ஜன.,31ல்) சந்திர கிரகணம் நடக்க உள்ளதால், பெரியநாயகியம்மன் கோயிலில் வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டம் இந்தாண்டு காலை10:00 மணிக்கு நடக்கிறது. மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படும். சாயரட்சை பூஜை மதியம் 2:45 மணிக்கு முடிந்து 3:45 மணிக்கு சன்னதி திருக்காப்பிடப் படும். இரவு 9:00 மணிக்குமேல் சம்ப்ரோக் ஷன பூஜை நடத்தி நடைசாத்தப்படும்.
இன்றைய நிகழ்ச்சி : தைப்பூச விழா ஆறாம் நாள் நிகழ்ச்சியாக, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 8:45 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி உலா.இரவு 7:45 மணி முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், இரவு 9:30 மணி, ரதவீதியில் வெள்ளித் தேரில் சுவாமி திருவுலா.