பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அறநிலைய துறை இணை ஆணையர் அசோக்குமார், நேற்று ஆய்வு செய்தார். கோவிலை புதுப்பிக்கும் பணி நடக்கவுள்ளதாக தெரிவித்தார். மாமல்லபுரம், கலைச்சின்னங்களால், பாரம்பரிய கலை சுற்றுலா இடமாக புகழ்பெற்றது ஒருபுறமிருக்க, 108 வைணவ கோவில்களில், 63வதாக, ஸ்தலசயன பெருமாள் கோவில் அமைந்து, ஆன்மிக இடமாகவும் விளங்குகிறது.
இக்கோவிலில், 1998ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், மீண்டும் நடத்தப்படவில்லை. இறைசக்தி தொடர்ந்து கிடைக்க, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கும்பாபிஷேகம் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். ஆனால், 20 ஆண்டுகள் கடந்தும் தாமதமாகி, பக்தர்கள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தியும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், துறை இணை ஆணையர், கே.பி.அசோக்குமார், நேற்று, கோவிலில் ஆய்வு செய்தார். நுழைவாயில் கோபுரம், சன்னதி விமானங்கள் உள்ளிட்டவற்றை புதுப்பிப்பது, அர்ச்சுனன் தபசு கலைச்சின்னத்தை மறைக்காத வகையில், உயரம் குறைவான சுற்றுச்சுவர் அமைத்து, வளாகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசித்தார்.
கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள உள்ளோம்; உயர் நீதிமன்ற உத்தரவிற்கேற்ப, தொல்லியல் அறிஞர் இங்கு பார்வையிட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்க, ஆலோசனை தெரிவிப்பார். இதுகுறித்து, அங்கீகார அறிஞர் குழுவிடம் விளக்கி, அனுமதி பெற்று, அதற்கேற்ப மதிப்பீடு தயாரித்து, திருப்பணி மேற்கொள்வோம். கே.பி.அசோக்குமார் இணை ஆணையர், அறநிலையத் துறை