ஒட்டன்சத்திரம்: கூட்டம் அதிகமாக இருந்ததால், பழநி பாதயாத்திரை பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து குழந்தைவேலப்பரை தரிசனம் செய்தனர்.காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து, பல வழித்தடங்களில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநி ரோட்டில் தான் செல்ல வேண்டும். இதன்காரணமாக ஒட்டன்சத்திரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இவர்கள் அனைவரும் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள குழந்தை வடிவில் வீற்றிருக்கும் குழந்தை வேலப்பரை தரிசனம் செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிக் கொள்வர். நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை முதலே வேலப்பரை தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்பட்டது. கோயிலுக்கு வெளியிலும் வரிசை இருந்ததால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.