பதிவு செய்த நாள்
24
டிச
2011
10:12
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை கெடிலம் நதிக்கரை அணைக்கட்டு பகுதியில், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், நாராயணமூர்த்தி, குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் வேல்முருகன் ஆகியோர், ஆய்வு செய்தனர். அப்போது, 32 கல்வெட்டுகளை கண்டுபிடித்தனர். ஆய்வாளர் தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த அணைக்கட்டு 1848ம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். நான்கு கண் வழிகளைக் கொண்ட இந்த அணை, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டுள்ளது. அணையில் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை கல்வெட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் காணப்படுகின்றன. கி.பி. 11ம் நூற்றாண்டில் தொடங்கி, நூற்றாண்டு வாரியாக 19ம் நூற்றாண்டு வரை சோழர், பாண்டியர், விஜயநகரத்தார் மற்றும் நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், சரநாராயண பெருமாள் கோவிலுக்குரிய கல்வெட்டுகளாகும். இவற்றில், இந்த இரண்டு கோவில்களுக்கும் அரசர்கள் அளித்துள்ள நில தானங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளன. திருவதிகையில் சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் இருந்து கருங்கற்களைக் கொண்டு வந்து, அணை நீர் விழும் தரைப்பகுதியில் பதித்துள்ளனர். இக்கருங்கற்களில் கல்வெட்டுகள், மண்டபத் தூண்கள் சிற்பங்கள் அடங்கும். இவ்வாறு, கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.