பதிவு செய்த நாள்
24
டிச
2011
10:12
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும். அதுவே மகிழ்வையும், நீடிய ஆயுளையும் வழங்குகிறது. அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும் போதே வழங்கப்படுகிறது. இறைகுலத்தின் மேன்மைக்காக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியாக பூமியில் செயல்படப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட மரியாள், அதற்கு நன்றி தெரிவித்தார். இறைவனின் அதிதூதரான கபிரியேல், மரியாளை சந்தித்து அருள் நிறைந்தவளே வாழ்க என்று கூறி இறைமகன் இயேசுவின் அவதார தகவலை தெரிவித்தபோது ""நான் ஆண்டவரின் அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் என்று தலைதாழ்த்தி அதை தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
சூசையப்பரை அவருக்கு மணமுடித்து வைக்க தேவாலய இறைபணியாளர்கள் முயன்றபோது, குழப்பமடைந்த மரியாள், இறைவனிடம் தன்னை கன்னியாகவே வைத்திருக்குமாறு மனமுருகி மன்றாடினார். அவரது கனவில் தோன்றிய இறைவன், தனது திருவளத்தின்படியே அனைத்தும் நடப்பதாகவும், அவரின் புனிதம் என்றென்றும் காக்கப்படுமென்றும் உறுதி அளித்ததார். கணவர் சூசையப்பருக்கு அனைத்து பணிவிடைகளையும் குறைவின்றி செய்து வந்தார். பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த மரியாளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் துவக்கம், முடிவு அனைத்தும் தெரியும் என்றாலும் அதை கணவரிடம் காட்டிக்கொள்ளாமல் அவரது விருப்பப்படியே அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவன், சூசையப்பருக்கு உணர்த்தி வந்ததால் அவரும் மரியாளிடம் ஆலோசனை கேட்டு நடப்பதில் ஆர்வம் காட்டினார். குழந்தை இயேசுவோடு தேவ ரகசியங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றிருந்த மரியாள், அவரின் கல்வாரி சிலுவை பாடுகள், அடைய வேண்டிய வேதனைகளை நினைத்து மனம் கலங்கினாலும் அதனால் இறைகுலத்திற்கு ஏற்படும் மீட்பினை நினைத்து மனதிற்குள் ஆறுதல் அடைந்தார். இறைவனால் படைக்கப்பட்ட அனைத்தையும் அடக்கி ஆளும் அதிகாரத்தை பெற்றிருந்த அவர், அதை ஒருபோதும் சோதித்து பார்க்கவோ, தனது நலத்திற்காக பயன்படுத்தியதியதோ இல்லை. மாறாக, பிறரின் துன்பத்தை கண்டு வருந்தும்போது, அதை நிவர்த்தி செய்யுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் கோரிக்கை வைப்பார்.மாசற்ற மரியாளை மகிமைப்படுத்தும் வகையில் விண்ணுலகில் அவர் எப்படியிருப்பார் என்ற தோற்றம் இறைவனால் உருவாக்கப்பட்டிருந்தது. சூரியனைப்போன்று களங்கமில்லாமல் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருந்த மரியாளுக்கு, புண்ணியவதி என்பதற்கு அடையாளமாக, தேவதூதர்கள் பேரழகு பொருந்திய பீதாம்பர ஆடை அணிவித்தனர். ரத்தினங்கள் அந்த ஆடையில் பதிக்கப்பட்டன. விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகத்திற்குரியவர் என்பதை எடுத்துக்காட்ட அவரது திருக்கழுத்தில் மூன்று வகையான அணிகலன்கள் அலங்கரித்தன. பரிசுத்த ஆவியின் ஏழு கொடைகளை என்றென்றும் பின்பற்றுபவர் என்பதை நிரூபிக்க, அவரது திருவிரல்களில் வைர மோதிரங்கள் மின்னின. விண்ணக அரசி என்பதை வெளிப்படுத்த அவரது சிரசில் பொன்மகுடம் சூட்டப்பட்டது. புனித மரியாள் விண்ணக அரசி மட்டுமல்ல, இறைகுலத்தின் நம்பிக்கை நட்சத்திரமும் அவரே.