பதிவு செய்த நாள்
01
பிப்
2018
11:02
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே தேவிநாயக்கன்பட்டியில், 11 வயது சிறுமி நிலாவுக்கு மனைவியாக கருதி கொண்டாடும் ’நிலாப்பெண்’ திருவிழா நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்தது. தேவிநாயக்கன்பட்டியில் ஆண்டுதோறும் தை மாத பவுர்ணமி நாளில் இந்தப் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது. ஊர் ஒற்றுமையை விளக்கும் விதமாக, உடல் நலம் குன்றிய, வயதுக்கு வராத இளம் பெண் ஒருவரை, தைமாத பவுர்ணமி நாளுக்கு 7 நாட்கள் முன்னதாக ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தேர்வு செய்வர். அவர் நலம் பெறுவதற்காக, ’நிலாப்பெண்ணாக’ அவரை அங்கீகரிக்கின்றனர்.
இந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், ஊரில் உள்ளவர்கள் பால், பழம், கலவை சாதம் என சத்தான உணவை கொண்டுவந்து கோயிலில் வைத்து கொடுக்கின்றனர். அவ்வுணவில் ஒரு பகுதியை எடுத்து நிலாவுக்கு வைத்து வணங்குகின்றனர். இந்தாண்டு தண்டபாணி, -நித்யா தம்பதியரின் மகள் கல்பனாதேவி,11, நிலா பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்றுதான் பவுர்ணமி நாள். நேற்று சந்திரகிரகணம் என்பதால், இந்தாண்டு விழாவை ஒருநாள் முன்கூட்டியே நடத்தினர். வானில் நிலவு தெரிந்தவுடன், அங்குள்ள மாசடச்சியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, சரளைமேடு எல்லைக்கு நிலாப்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அங்கு உட்கார வைத்து தலையில் ஆவாரம் பூ சூடினர். ஆவாரம் பூ மாலையிட்டு, கூடை நிறைய ஆவாரம்பூவை சுமக்கச்செய்து மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றனர்.
மாரியம்மன் கோயில் முன்பு உட்கார வைத்து, பெண்கள் பாட்டுப்பாடி கும்மியடித்தனர். பின் அருகில் உள்ள, விநாயகர் கோயிலில் சுவாமி கும்பிட்டு, நிலாப்பெண்ணை மீண்டும் மாசடச்சியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது தாய் மாமன்களால் கட்டப்பட்ட தென்னங்கீற்று குடிசையில் உட்கார வைத்து, பெண்கள் மீண்டும் கும்மியடித்து பாட்டுப் பாடினர். நிலா மறைய துவங்கியதும், இளம்பெண் சுமந்துவந்த ஆவாரம்பு கூடையில் மண் தீப சட்டியை வைத்து தீபம் ஏற்றினர். அதை சுமந்து சென்ற நிலாப்பெண், நீர் நிறைந்த கிணற்றில் அந்த பூக் கூடையுடன் கூடிய தீபத்தை விட்டார். அதன் பின் அனைரும் வணங்கி வீடுதிரும்பினர்.