பதிவு செய்த நாள்
01
பிப்
2018
05:02
திருப்பத்துார்: ஏலகிரிமலையில், கி.பி., 10 நூற்றாண்டு, பிற்கால சோழர் காலத்து புலிக்குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டம், திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, மங்களம் கிராமத்தை சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நீலமேகம் ஆகியோர் சேர்ந்து, ஏலகிரிமலை, அத்னாவூரில், புலிக்குத்திப்பட்டான் என்ற நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஏலகிரிமலை அத்னாவூரில் காணப்பட்ட புலிக்குத்திப்பட்டான் நடுகல், ஐந்தடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடுகள், பொதுமக்களை கொன்று வந்த புலியை எதிர்த்து போரிட்டு, அதை கொன்று, தானும் இறந்த வீர மறவனுக்கு அவ்வூர் மக்கள் நடுகல் அமைத்து தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். வீரனின் உருவம் பெரிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கைதிகளில் வாள்களை ஏந்திய வீரன், ஆவேசமாக புலியுடன் போரிட்ட போது, இடது கையை புலி கவ்வியுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீரனுக்கு திருமணம் நடந்த நாளன்று, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த புலியை, திருமண கோலத்தில் சென்று போரிட்டு புலியை கொன்று தானும் இறந்துள்ளான். இதனால் இந்த வீரன், ஊரை காக்க உயிர் வீட்ட வீரமறவனாவான். இதனால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் பொங்கல் பண்டிகையின் போது, இவ்வீரனுக்கு மரியாதை செலுத்தினர். இந்த நடுகல் கி.பி., 10ம் நூற்றாண்டு பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாகவும். மேலும், ஏலகிரிமலையில், ஒரு காலத்தில் கொடிய புலிகள் வசித்து வந்ததற்கு, இந்த நடுகல் சான்றாகவும் விளங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.