முதுகினால் சோலைமலைக்கு தேர் இழுக்கும் கோயில் பூஜாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2018 10:02
வடமதுரை: அய்யலுார் கோயில் பூஜாரி வெங்கடேசன், தனது முதுகினால் தேரை இழுத்து கொண்டு சோலைமலைக்கு சென்றார். அய்யலுார் தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் கோயிலில் தைப்பூச விழா கடந்த ஜன.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
அக்கினிசட்டி, பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோயிலில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள ஏதாவது ஒரு முருகன் கோயிலுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே குழுவாக பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தற்போது 53வது ஆண்டாக தற்போதைய கோயில் பூஜாரி வெங்கடேசன் முதுகில் அலகு குத்தி, மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு தேர் இழுத்து செல்ல, ஏராளமான பக்தர்கள் அவரை பாதயாத்திரையாக பின்தொடர்ந்தனர். இவர்கள் மணக்காட்டூர், நத்தம், பரளி வழியே சென்று பிப்.3ல் முருகனை சுவாமி தரிசனம் செய்து ஊர் திரும்புவர். இதுதவிர நேர்த்திகடனுக்காக பக்தர்கள் சிலர் சிறிய ரக தேர்களை முதுகில் அலகு குத்தி இழுத்தவாறு அய்யலுார் கடைவீதியை வலம் வந்தனர். ஒரு பெண் 16 அடி நீள அலகை (வேல் கம்பி) வாயில் குத்தி கடைவீதியை வலம் வந்து நேர்த்திக்கடன் செய்தார்.