பதிவு செய்த நாள்
02
பிப்
2018
11:02
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோவில் தேரடி தெப்பக்குளத்தில், நாளை, தெப்போற்சவத்துடன், தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. தைப்பூச விழாவில், நேற்றும் மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், பால்குடங்கள், காவடிகள் எடுத்து ஆட்டம், பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, 8:00 மணிக்கு, தங்கக்குதிரை வாகனத்தில், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். விழாவின், 9-ம் நாளான இன்று காலை, 9:00 மணிக்கு, முத்துக்குமாரசுவாமி புது சப்பரம், இரவு, 9:00 மணிக்கு, பெரிய தங்கமயில் வாகனத்தில், சுவாமி ரத வீதியில் திருவுலா வருதல் நடக்கிறது.
விழாவின், 10ம் நாளான நாளை காலை, சப்பரத்தில் எழுந்தருளல், இரவு, 7:00 மணிக்கு மேல், தேரடி தெப்பக்குளத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை தெப்போற்சவ விழா நடக்கிறது. இரவு, 11:00 மணிக்கு, பெரியநாயகியம்மன் கோவிலில், கொடி இறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது. பழநி மலைக் கோவிலில், வழக்கமாக நாள்தோறும், இரவு, 7:00 மணிக்கு மேல், தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு நடைபெறும். ஜன., 29 - பிப்., 2 வரை, தங்கரதம் நிறுத்தப்பட்டது. நாளை முதல், வழக்கம்போல் இரவு, 7:00 மணிக்கு, தங்கரதப் புறப்பாடு நடைபெற உள்ளது.