உறையூர் குங்குமவல்லி அம்மனுக்கு வளைகாப்பு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 03:02
திருச்சி: உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் குங்குமவல்லி (வளைக்காப்பு நாயகி) அம்மனுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கர்ப்பிணிகளின் துயர்நீக்க தாயுமானவர் தானாக வந்த காரணத்தினால் “தான்தோன்றீஸ்வரர்” என பெயர் கொண்டு உறையூர் சாலை ரோட்டில் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் அம்பிகையின் பெயர் “குங்குமவல்லி” (வளைக்காப்பு நாயகி). இங்கு அம்பிகைக்கு வருடந்தோறும் தை மாதம் 3வது வெள்ளிக்கிழமை “வளையல்காப்பு ” உற்சவம் நடைபெறுகிறது. நேற்று(பிப்.2ல்) நடைபெற்ற பூஜையில் கர்ப்பிணிகளும், குழந்தைப் பாக்கியம் வேண்டுபவர்களும், கன்னி பெண்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
நாளை(பிப்.4ல்) காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை - திருமணம் வேண்டி ஆண், பெண் இருபாலருக்கும் மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் சுமங்கலிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 1.00 மணிக்கு - திருமண தடை நீங்கி விவாகம் நடக்கவும் மாங்கல்ய பாக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜை நடைபெறும். மதியம் 2.00 மணிக்கு, பக்தர்களுக்கு 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.