பதிவு செய்த நாள்
05
பிப்
2018
03:02
திருப்பூர் :திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களிலும், தீ விபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து, பக்தர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிகாரிகள் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதை தடுக்க, அனைத்து கோவில்களிலும், தீ விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உட்பட, பிரசித்தி பெற்ற கோவில்களில், தீ விபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கோவில் திருவிழாவின் போது பயன்படுத்தும், சப்பரங்கள், வாகன காட்சிகளுக்கு பயன்படுத்தும் உருவாரங்கள், சூரசம்ஹார விழாவுக்கான பொம்மைகள், கோவில் தேர் அலங்கார துணி வகைகள் என, பல்வேறு வகையான பொருட்கள், விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில் வளாகத்தில், கோவில் அலுவலகம் அருகே திறந்தவெளி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.இதேபோல், அவிநாசி கோவிலிலும், பாதுகாப்பாற்ற முறையிலும், பராமரிப்பின்றியும், வாகனங்கள் ேபாட்டு வைக்கப்பட்டுள்ளன. கோவில் திறந்திருக்கும் நேரத்தில் சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும், தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கோவில் நடைசாத்திய நேரத்திலும், மின்கசிவால் விபத்து நடக்குமோ என்ற பயம் உருவாகியுள்ளது.எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களின், தீ விபத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
உழவாரப்பணிநடத்தலாமே!
விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், தீப விளக்குகள் வைக்க சிறப்பு ஏற்பாடுகள் இல்லை. சனீஸ்வர பகவான் சன்னதி முன் உள்ள மரத்தின் அடியில் தீபம் வைக்கின்றனர். கோவில் முன்புற மண்டபத்தில், தீபம் வைக்க ஸ்டாண்ட் வைக்கப்பட்டுள்ளதால், அங்கு நுாற்றுக்கணக்கான தீபம் வைக்கும் பக்தர்கள், எண்ணெய் படிந்த கைகளை, அருகில் உள்ள சிற்பங்கள் பொருந்திய கற்துாண்களில் துடைக்கின்றனர். இதனால், கோவில் முன்புறத்தில் உள்ள கலைநயமிக்க கற்துாண்கள், எண்ணெய் படிமங்களை சுமந்தபடி அசுத்தமாக காட்சியளிக்கின்றன. கோவில் வளாகத்தில் துாய்மை பணி முறையாக நடப்பதில்லை. எனவே, கோவில் வளாகத்தில் உழவாரப்பணி செய்ய, ஆன்மிக அமைப்பினர் முன்வரவேண்டும். கற்துாண்கள், சுவர்களில் எண்ணெய் படிமங்களை நீக்கி, ’வார்னிஷ்’ அடித்து பொலிவுபடுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.